மலேசியாவில் $790,000 லஞ்ச மோசடியின் தொடர்பில் 13 பேர் கைது

மலேசியாவில் $790,000 லஞ்ச மோசடியின் தொடர்பில் 13 பேர் கைது

படம்: த ஸ்டார், ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

17 Jun 2026 - 7:53 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தீபகற்பத்தின் வடபகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.

பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள். எஞ்சிய ஐவரில் குடிமக்களும் நிறுவன உரிமையாளர்களும் அடங்குவர்.

கையூட்டு, ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அமைப்பின் ஏலக்குத்தகைத் திட்டங்களுக்கு வணிகக் கூட்டமைப்பொன்றின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிறுவனங்களை நியமிப்பதற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பிடிபட்டவர்களில் 10 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். பேராக்கில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்குத் திங்கட்கிழமை வாக்குமூலம் கொடுக்கச் சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆணையத்தின் உத்திபூர்வத் தொடர்புப் பிரிவு, புதன்கிழமை (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சந்தேக நபர்களில் அரசாங்க ஊழியர்கள் இருவரும் நிறுவன இயக்குநர் ஒருவரும் இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

எஞ்சிய 10 பேரும் இம்மாதம் 20ஆம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பர்.

சந்தேக நபர்கள், 2024ஆம் ஆண்டிலிருந்து அண்மைக் காலம்வரை சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் 10 முதல் 15 விழுக்காடு வரை கையூட்டு கொடுக்கவேண்டியிருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூறினர். அந்தப் பணம், நிறுவன இயக்குநருக்கும் அரசாங்க அமைப்பின் முன்னாள் இயக்குநருக்கும் தரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஆணையம் அதனைத் தெரிவித்தது.

இம்மாதம் 15ஆம் தேதி, கோலாலம்பூர், சிலாங்கூர், பாகாங், பேராக் வட்டாரங்களில் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சம்பந்தப்பட்டோரின் வீடுகள், அலுவலகங்கள், அரசாங்க அமைப்பின் அலுவலகங்கள் உட்பட 25 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஏறக்குறைய 1.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், விலையுயர்ந்த கைக்கடிகாரம், இரண்டு வாகனங்கள், அதிவேகமாகச் செல்லக்கூடிய மோட்டார்சைக்கிள், ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் முதலியவற்றை ஆணையம் கைப்பற்றியது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாலஞ்சம்கையூட்டுஅரசாங்கம்இயக்குநர்