கியவ்: ரஷ்யா செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளையும் பல ஏவுகணைகளையும் கொண்டு உக்ரேன்மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
அதற்கு முன்னதாக, பெரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போவதாக மிரட்டி, கியவ்வில் இருந்து வெளியேறுமாறு அது வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ரஷ்யா மேலும் ஒரு பெரிய அளவிலான தாக்குதலுக்கு ஆயத்தமாவதாக கியவ்வில் உள்ள அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். நான்கு ஆண்டுகளாக அந்த வட்டாரத்தில் கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கியவ்வில் இருந்த ஏஎஃப்பி செய்தியாளர்கள், நகரம் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிகள் அலறுவதைக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடித்த உரக்கமான வெடிச்சத்தங்களால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தங்கள் பைகளுடனும் போர்வைகளுடனும் கூட்ட நெரிசல் மிகுந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுவதற்காக விரைந்தனர்.
ரஷ்யாவின் அண்மைத் தாக்குதல் அதன் விரக்தியைக் காட்டுகிறது என்றும் போர்க்களத்தில் ரஷ்யப் படைகள் திணறி வருவதால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பொதுமக்கள்மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துகிறார் என்றும் உக்ரேனின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், அண்மைத் தாக்குதல், ஐரோப்பா தனது சொந்த ஆகாயத் தற்காப்பு முறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது என்றும் அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரேனின் ஆகாயத் தற்காப்பு முறைக்கு ஆதரவு வழங்குவதில் ஏற்படும் ‘ஒவ்வொரு தாமதமும்’ ‘உயிர்களைப் பலிவாங்கும்’ என்று அந்நாட்டின் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யா 73 ஏவுகணைகளையும் 656 ஆளில்லா வானூர்திகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் ஆகாயப் படை தெரிவித்தது.
அவற்றில் 602 ஆளில்லா வானூர்திகளையும் 40 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

