குழந்தை மருத்துவர்மீது 130 சிறார் பாலியல் குற்றச்சாட்டுகள்

குழந்தை மருத்துவர்மீது 130 சிறார் பாலியல் குற்றச்சாட்டுகள்

1 mins read
c27b8ae0-d27a-4ad8-8fbf-a362525ecf9b
சந்தேக நபர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

பெர்லின்: ஜெர்மானிய குழந்தை மருத்துவர் ஒருவர், சிறாருக்குப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாலியல் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

அவர்மீது 130 சிறார் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் புதன்கிழமை (மே 13) தெரிவித்தனர். சந்தேக நபர் 12 ஆண்டு காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாக அவர்கள் அறிக்கை மூலம் குறிப்பிட்டனர்.

எத்தனை சிறார் பாதிக்கப்பட்டனர் என்பதை பொட்ஸ்டாம் நகர அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கவில்லை. சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ஹாவலண்ட் கிளினிக்கன் எனும் நிறுவனத்துக்கு வேலை செய்துகொண்டிருந்தபோது சந்தேக நபர் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதிக்கும் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அம்மருத்துவர் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது நிபுணத்துவப் பணிகளை மேற்கொண்டு வந்தபோது குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்டன்பெர்க்கில் உள்ள ராத்திநாவ், நாவென் ஆகிய நகரங்களில் அவர் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இம்மாதம் ஆறாம் தேதி சந்தேக நபர்மீது சுமத்தப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தற்போது 46 வயதாகும் சந்தேக நபர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்