அமெரிக்காவில் பனிப்புயலால் 13,000 விமானப் பயணங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயலால் 13,000 விமானப் பயணங்கள் ரத்து

2 mins read
ce57997d-90d2-4cc4-aacb-be8adb3e5819
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் டேலஸ் - ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலையத்தில், விமானத்தின் மீது படிந்துள்ள பனியை ஊழியர்கள் அகற்றுகின்றனர்.  - படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவில் தற்போது நிலவும் கடுமையான பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

டெக்சஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை ஏற்பட்டுள்ள விமான ரத்துகள், இதுவரை ஆக அதிக அளவில் செய்யப்பட்டவையாகும். அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 13,000 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2025ல் அந்நாட்டு அரசாங்கம் முடக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள ஆகப் பெரும் விமானச் சேவைத்தடையாக இது உள்ளது. அரசாங்க முடக்கத்தின்போது பல்வேறு அரசாங்க, பொதுச்சேவைத் துறையினரின் சம்பளங்களும் நிறுத்தப்பட்டதால் நிலவிய ஊழியர்ப் பற்றாக்குறை, சேவைத்தடைக்குக் காரணம்.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், டேலஸ் - ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலைய ஒன்றாம் முனையம் வழியாகப் பயணிகள் நடந்து செல்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், டேலஸ் - ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலைய ஒன்றாம் முனையம் வழியாகப் பயணிகள் நடந்து செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவில் ஜனவரி 24 முதல் 26 வரை, இதுவரையில் 13,000 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ‘ஃபிளைட்அவேர்’ (FlightAware) தளம் தெரிவித்தது. கொவிட்-19 காலகட்டத்தில் இருந்த சேவைத்தடையின் அளவைத் தற்போதைய நிலவரம் நெருங்கி வருவதாக விமானத்துறைத் தரவு ஆய்வு நிறுவனமான ‘சிரியம்’ (Cirium) தெரிவித்தது.

நியூயார்க் நேரப்படி சனிக்கிழமை (ஜனவரி 24) காலை 9.30 மணிக்கு (சிங்கப்பூரில் இரவு 10.30 மணிக்கு), மெம்பிஸிலிருந்து 90 விழுக்காடு பயணங்களும், ஒக்லஹோமா நகரிலிருந்து 76 விழுக்காடு பயணங்களும், டேலஸ் - ஃபோர்ட் வொர்த் (Dallas - Fort Worth) நகரிலிருந்து 75 விழுக்காடு பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேலஸ் - ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலையத்தில் (ஜனவரி 24) காணப்படும் விமானச் சேவை விவரங்கள்.
டேலஸ் - ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலையத்தில் (ஜனவரி 24) காணப்படும் விமானச் சேவை விவரங்கள். - படம்: ஏஎஃப்பி

பனிப்புயல் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு தொடரும் சூழலில் பாதிப்புகள் விரிவடைகின்றன. ஆஸ்டின், சார்லட், நேஷ்வில் ஆகிய நகரங்களின் விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் நகர்ந்து வருவதால் வாஷிங்டன், நியூயார்க் வட்டாரங்களிலும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கப் பருவநிலை நிபுணர்களும் விமானப் போக்குவரத்துப் பணியாளர்களும் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் (FAA), ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தது.

விமானப் போக்குவரத்து குறித்த அண்மைய விவரங்களுக்காக fly.faa.gov தளத்தைக் கண்காணிக்கும்படியும் அந்த அமைப்பு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

அத்துடன், கடும் பனிப்புயலால் 230,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை வரலாற்று ரீதியாகக் குறிப்பிடத்தக்கது எனக் கூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர நிலையை அறிவித்தார்.

“நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, புயலின் பாதையிலுள்ள எல்லா மாநிலங்களுடனும் தொடர்பில் இருப்போம். பத்திரமாக இருங்கள்,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்