கோலாலம்பூர்: 2025, 2026ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், முறையான அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உள்ளூர் அமைப்புகளுக்கு 1,305 புகார்கள் வந்துள்ளன. இதில் மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டுமானங்களும் அடங்கும்.
வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சு, இந்தப் புகார்களில் 114 புகார்கள் நில, மாவட்ட அலுவலகங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், அவை அந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துபூர்வ நாடாளுமன்ற பதிலில், “இதனைத் தொடர்ந்து, உள்ளூர் அமைப்புகள் 197 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குதல், அபராதம் விதித்தல், இடமாற்ற உத்தரவுகள், இடிப்பு நடவடிக்கைகள் என மொத்தம் 432 அமலாக்கச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம் தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சே முகமது ஜுல்கிஃப்லி ஜுசோ (பக்கத்தான் ஹரப்பான்-பெசுட்) எழுப்பிய கேள்விக்கு, வீட்டுவசதி, உள்ளூராட்சி அமைச்சு பதிலளித்தது. எந்தவொரு கட்டுமானமும் கட்டட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படாது என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும், குறிப்பாக மருத்துவமனைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு அருகில் இத்தகைய வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது தொடர்ந்து ஒரு சிக்கலாகவே இருந்து வருகிறது.
1974ஆம் ஆண்டின் தெருக்கள், வடிகால், கட்டடச் சட்டத்தின் (சட்டம் 133) பிரிவு 70(1)-இன் படி, உள்ளூர் அமைப்பிடமிருந்து எழுத்துபூர்வமான அனுமதி பெறாமல் எவரும் எந்தவொரு கட்டடத்தையும் கட்டக்கூடாது என்று அமைச்சு சுட்டிக்காட்டியது.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சீனக் கோயில்கள், இந்து ஆலயங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வழிபாட்டுத் தலங்களுக்கும் இது பொருந்தும். எந்தவொரு சமயத்திற்கும் இதில் விதிவிலக்குகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்படமாட்டாது.
அரசு நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள், நில, மாவட்ட அலுவலகங்கள், மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. 1965ஆம் ஆண்டின் தேசிய நிலச் சட்டத்தின் கீழ், நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கோ அல்லது அனுமதியின்றி நிலத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்கோ நில, மாவட்ட அலுவலகங்கள் அறிவிப்புகளை வழங்கும்.
“தனியார் நிலத்தில் ஒரு கட்டடம் (வழிபாட்டுத் தளம்) கட்டப்பட்டிருந்தால், இன, சமய ரீதியான பதற்றங்களைத் தவிர்க்கும் பொருட்டு, நில உரிமையாளர் தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் (தானாகவே இடிக்கும் பணியில் ஈடுபடுவது போன்றவை) எடுக்க அனுமதி இல்லை.
“இத்தகைய சூழலில், உடனடியாகக் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். வழிபாட்டுத் தலத்தைக் கட்டும் தரப்பினருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும். மேலும், இது குறித்து மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது உள்ளூர் அதிகார அமைப்பிற்கோ தெரிவிக்க வேண்டும்,” என்று அமைச்சு விளக்கியது.
