பெக்கன்பாரு: இந்தோனீசியாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாடு போராடி வரும் நிலையில் அங்குள்ள அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அந்த நபர்கள்மீது நாட்டின் பல பகுதிகளில் தீயை மூட்டியதாகக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆயினும் தீ மூண்டதற்கு உண்மையில் காரணமானவர்களைக் கைது நடவடிக்கைகள் மீண்டும் அவ்வாறு தீ மூட்டுவதில் இருந்து தடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ரியாவ் மாநிலத்தில் காவல்துறையினர் 49 சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் இருந்த 3,000 ஹெக்டர் பரப்பளவு காட்டைக் கிட்டத்தட்ட முற்றிலும் தீக்கிரையாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தனிப்பட்ட வகையில் 45 வழக்குகளில் அந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
“தீ எப்படி தொடங்கியது என்பதுமுதல் அவற்றுக்குக் காரணமானவர்கள் வரை ஒவ்வொரு காட்டுத் தீச்சம்பவமும் ஆழமாக விசாரிக்கப்படும். குற்றம் புரிந்ததற்கான போதிய சாட்சியங்களும் சான்றுகளும் இருந்தால் அதிகாரிகள் அவர்கள்மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்,” என்று ரியாவ் மாநிலக் காவல்துறையின் குற்றவியல் பிரிவுத் தலைவர் அடி குன்கொரோ ரிட்வான் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தார்.
அதோடு ரியாவ் மாநிலம் முழுவதும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துல், அணைத்தல், தடுத்தல் ஆகிய செயல்பாடுகளோடு சட்ட நடவடிக்கைகளும் ஒருசேர எடுக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
செம்பனை உற்பத்தி
ரியாவ் மாநிலம் இந்தோனீசியாவின் செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் முக்கிய வட்டாரம் ஆகும். அங்கு மட்டும் தற்போது 10 இடங்களில் காட்டுத்தீ எரிந்துவருகிறது. அவற்றில் சில பகுதிகளில் கடந்த 10 நாள்களாகத் தீ தொடர்ந்து எரிகிறது.
இந்தோனீசியாவின் மேற்கில் உள்ள ரியாவ் தீவுக்கூட்டங்களில் இவ்வாண்டுத் தொடக்கம் முதல் 19,000 ஹெக்டர் அளவிலான காட்டுப் பகுதிகள் தீக்கிரையாகிவிட்டன என்று அதிகாரிகள் கூறினர்.

