இந்தோனீசியாவில் ரயில்கள் மோதல்; 15 பேர் மரணம், 84 பேர் காயம்

இந்தோனீசியாவில் ரயில்கள் மோதல்; 15 பேர் மரணம், 84 பேர் காயம்

2 mins read
நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்மீது மற்றொரு ரயில் மோதியது
b64674a1-9eb4-48fe-be9a-510ca42bf77b
ஜகார்த்தாவுக்கு அருகே பெகாசி எனும் இடத்தில் விபத்து நேர்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகே பெகாசி எனும் இடத்தில் இரு ரயில் வண்டிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் இறந்துவிட்டனர்; மேலும் 84 பேர் காயமுற்றனர்.

இரு வண்டிகளிலும் பயணிகள் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக ரயில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறு நகர்களுக்குச் செல்லும் பயணிகள் வண்டியும் நெடுந்தொலைவு செல்லும் மற்றொரு வண்டியும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனீசியத் தேடுதல், மீட்புப் படையின் தலைவர் முகம்மது சியாஃபி, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்பது மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்று விவரித்தார்.

“அத்தகைய மீட்புப் பணிகளை கையாளும் திறன் கொண்டவர்களைக் கொண்டு துல்லியமாக செயலாற்ற வேண்டியுள்ளது. சிக்கியுள்ள பயணிகள் உயிருடன் இருப்பதால் அவர்களை மீட்கும் நம்பிக்கையுடன் நாங்கள் செயலாற்றுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

ரயில் வண்டிகளின் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, மீட்புப் பணியாளர்கள் பலவித இயந்திரங்களைக் கொண்டு, இரும்புப் பொருள்களை வெட்டி அகற்றி, சிக்கிய பயணிகளை மீட்க முயல்கின்றனர்.

ஜகார்த்தாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெகாசி தீமோர் என்ற நிலையத்தில் பயணிகள் ரயில் வண்டி நின்றுகொண்டிருந்தபோது, நெடுந்தொலைவு ரயில் வண்டி நேராக வந்து அதன்மீது மோதியதாக மீட்கப்பட்ட பயணிகளில் சிலர் கூறினர்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘கெஏஐ’ ரயில் நிறுவனத்தின் பேச்சாளர் திருவாட்டி அன்னா புர்பா, உள்ளூர் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வழங்கிய பேட்டியில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், 81 நபர்கள் காயமுற்றதாகவும் கூறியிருந்தார்.

மரண எண்ணிக்கை 15ஆகவும் காயமுற்றோர்களின் எண்ணிக்கை 84 எனவும் தற்போதைய நிலவரப்படி அதிகரித்துள்ளது.

நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் வண்டியின் கடைசிப் பெட்டி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒன்றாகும். நெடுந்தூரப் பயண வண்டி மோதியபோது விபத்தில் அது மிக மோசமாகச் சேதமடைந்தது.

இந்தோனீசியாவில் நடந்துள்ள மிகப் பயங்கர விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்