குளுவாங்கில் இரு கார்கள் மோதிய விபத்தில் 13 பேர் காயம், ஒருவர் மரணம்

2 mins read
b20161b1-cd84-4d2c-aea0-35eeaae3c037
இரு வாகனங்கள் மோதிய விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார். - படம்: மலேசிய காவல்துறை

குளுவாங்: மலேசியாவில் இரு கார்கள் மோதிய விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்ததால் மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் துயரத்தில் முடிந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

திங்கட்கிழமை இரவு ஜாலான் ரெங்காம்-லாயாங் லாயாங் கேஎம் 25ல் விபத்து நிகழ்ந்தது.

ஹோண்டா சிட்டி காரின் ஓட்டுநர் முஹமட் அமிருதீன் கமால்ருஸமான், 29, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இன்ச்செ பேசார் ஹஜ்ஜா கல்சாம் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக குளுவாங் காவல்துறை தலைமை உதவி ஆணையர் பஹ்ரின் முஹமட் நோ தெரிவித்தார்.

பல்நோக்கு (எம்பிவி) வாகனத்தின் ஓட்டுநர் ஃபரா அன் அப்துல்லாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

திரு முஹமட் அமிருதீன், ஐந்து பயணிகளுடன் காரில் பயணம் செய்தார். ஒரு வயதிலிருந்து 60 வயது வரையிலான பயணிகள் அந்த காரில் இருந்தனர். அதே சமயத்தில் ஃபரா அயினின் எம்பிவி வாகனத்தில் மூன்று முதல் 21 வரையிலான எட்டுப் பயணிகள் பயணம் செய்தனர்.

சம்பவத்தின்போது இரவு எட்டு மணியளவில் எம்பிவி வாகனம் ரெங்காமிலிருந்து லாயாங் லாயாங்கை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது. ஹோண்டா சிட்டி எதிர்திசையில் வந்தது.

எம்பிவி வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஹோண்டா சிட்டி குறுக்கே நுழைந்ததால் விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதில் இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகின என்று ஆணையர் பஹ்ரின் முஹமட் நோ தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்