புதுடெல்லி: நேப்பாளத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்ததில் குறைந்தது 14 இந்தியர்கள் இறந்துவிட்டனர், மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பேருந்தில் கிட்டத்தட்ட 40 பேர் பயணம் மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது. அந்தப் பேருந்து தலைநகர் காட்மாண்டுவில் இருந்து ஏறக்குறைய 110 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தானஜ்ஹுன் மாவட்டத்தில் உள்ள மார்சயாங்டி ஆற்றில் விழுந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பேருந்து காட்மாண்டுவிலிருந்து பொக்கரா என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருந்ததாக அரசு அதிகாரி ஒருவர் விளக்கினார்.
“இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதிவு எண்ணான எஃப்டி 7623ஐ கொண்டிருந்த அந்தப் பேருந்து ஆற்றங்கரையில் இருப்பதாக நேப்பாளத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அங்கு துயர்துடைப்பு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேப்பாளத்தின் சிட்வான் வட்டாரத்தில் சென்ற மாதம்ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் திரிஷுலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் குறைந்தது ஐந்து இந்தியர்கள் மரணமடைந்தனர்.