கிய்யவ்: உக்ரேனில் ரஷ்யா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
போர் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் இரவிலேயே உக்ரேனை அதிகம் தாக்கிய ரஷ்யா, அண்மைய சில வாரங்களாக இதுபோன்று பகல் நேரத்தில் அதன் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
இம்முறை ஏறத்தாழ 500க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகளையும் பல ஏவுகணைகளையும் ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரேனிய விமானப் படை தெரிவித்துள்ளது.
அமைதி நிலவவேண்டிய கத்தோலிக்கச் சமயத்தின் ஈஸ்டர் ஞாயிறன்று (ஏப்ரல் 5) தடுமாறச் செய்யும் நோக்கத்துடன் ரஷ்யா அதன் வான்வழித் தாக்குதலைக் கடுமையாக மேற்கொண்டுள்ளது என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
பண்டிகைக் காலத்தில் சண்டை நிறுத்தத்தை எதிர்பார்த்துத் தயாராக இருந்ததாகவும் அதிபர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார். ஆனால், அதுகுறித்த எவ்வித முறையான அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
தலைநகர் கியவ்வில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், எண்மர் காயமுற்றதாக அவ்வட்டார ஆளுநர் மைகோலா கலாஷின்க் கூறினார். அங்கிருந்த கால்நடை மருத்துவமனை தாக்குதலுக்கு உட்பட்டதால் 20 மிருகங்களும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சில குடியிருப்பாளர்கள் ரயில் நிலையங்களில் பதுங்கி இருந்தனர். ஆனால், பலர் அபாய ஒலி கேட்டும் காப்பிக் கடைகளில் எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந்திருந்ததாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் கூறினர்.

