பங்ளாதேஷில் ரயில்கள் மோதல்; 15 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்

1 mins read
0e4f6c3c-769f-4572-b4d4-802b33ad1800
சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டன. - படம்: பங்ளாதேஷ் தீயணைப்பு, குடிமைத் தற்காப்புப் படை
multi-img1 of 2

டாக்கா: பங்ளாதேஷில் திங்கட்கிழமை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 15 பேர் இறந்துவிட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைரப் நகரில் இவ்விபத்து நிகழ்ந்தது. சரக்கு ரயில் ஒன்று, பயணிகள் ரயில்மீது மோதியதில் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இதுவரை 15 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். பலர் காயமடைந்துள்ளனர்,” என்று பைரப் நகரைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

தடம்புரண்டதால் கவிழ்ந்த பெட்டிகளுக்கு அடியில் இன்னும் உடல்கள் கிடப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறினர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்த அதிகாரி சொன்னார்.

பிற்பகல் 3.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

சமிக்ஞை விளக்கைக் கண்டுகொள்ளாமல் பயணிகள் ரயில் வந்த அதே தடத்தில் சரக்கு ரயில் சென்றதே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பங்ளாதேஷ் ரயில்வே (கிழக்கு) இடைக்காலப் பொது மேலாளர் நஸ்முல் இஸ்லாம் கூறியதாக ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்