வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தென்கொரிய இறக்குமதிகளுக்கு 15 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று புதன்கிழமை (ஜூலை 30) தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு அவர் இதை அறிவித்தார்.
புதிய ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாகத் தென்கொரியாவுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைவிடக் குறைவான வரி விகிதத்தை அவர் விதித்துள்ளார்.
ஆசிய வட்டாரத்தில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும் முன்னணி வர்த்தகப் பங்காளித்துவ நாடாகவும் விளங்குகிறது தென்கொரியா.
பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு ஆகஸ்டு 1ஆம் தேதி முதல், வரி உயர்வு நடப்புக்கு வரும் என்று திரு டிரம்ப் முன்னர் அறிவித்திருந்தார். அதன்கீழ், தென்கொரிய இறக்குமதிகளுக்கு 25 விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்காவும் தென்கொரியாவும் முழுமையான வர்த்தக உடன்பாடு தொடர்பில் இணக்கம் கண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதத் தேர்தலுக்குப்பின் தென்கொரிய அதிபராகப் பதவியேற்றுள்ள லீ ஜே மியுங், ஏற்றுமதிச் சூழலில் நிலவிய நிச்சயமற்றதன்மையை இந்த உடன்பாடு போக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மிகப் பெரிய தடையைக் கடந்துவிட்டதாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.

