பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புதுப்பிக்கப்பட்டுள்ள தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் முதல் நாளில் 150 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஏழு ஆண்டுகள் நிறுத்தப்பட்ட அந்தத் திட்டம், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
மலேசியா முழுவதுமிருந்தும் வந்திருக்கும் அந்தப் பயிற்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) காலை கோலாலம்பூரில் உள்ள ‘அஸ்கார் வாட்டானியா’ முகாமுக்குத் தங்கள் குடும்பத்தாருடன் சென்றதாக பெர்னாமா கூறியது.
18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 150 பயிற்சியாளர்களும் தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் 3.0 முன்னோட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்திருந்தனர். அவர்கள் 45 நாள்கள் நீடிக்கும் பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
முன்னதாக, தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் 3.0 கோலாலம்பூரிலும் பாகாங்கிலும் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் நடத்தப்படும் என்று தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸஹாரி கூறியிருந்தார். அதன் பிறகு, அது நாடு முழுவதும் உள்ள மற்ற 13 முகாம்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் 3.0ஐத் தொடங்க அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய சேவைப் பயிற்சித் திட்டம், உயர்நிலைப் பள்ளி மேல்வகுப்பு மாணவர்கள், ‘எஸ்பிஎம்’ முடித்த மாணவர்கள், உயர்கல்விக் கழகங்களைச் சேர்ந்த இளையர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது.

