கோலாலம்பூர்: மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாத நிலவரப்படி, அமைச்சுகளைக் குறிவைத்து 1,547 இணைய ஊடுருவல்கள் நடத்தப்பட்டதாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசங்கள்) டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா கூறினார்.
அவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய இணையப் பாதுகாப்பு முகவை, தேசிய பாதுகாப்பு மன்றம், பிரதமர் அலுவலக அமைச்சு ஆகியவற்றின் உன்னிப்பான கண்காணிப்பும் உடனடி நடவடிக்கைகளும் இணைய ஊடுருவல் முயற்சிகள் தோல்வி அடைய காரணமாக இருந்ததாக டாக்டர் ஸலிஹா கூறினார்.
மலேசிய அரசாங்கத்தின் இணைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்ய நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்குச் சிறந்த அணுகுமுறைகளை தேசிய இணைய ஒருங்கிணைப்பு, தளபத்திய நிலையம் தொடர்ந்து பரிந்துரை செய்யும் என்றார் அவர்.
ஆக அண்மைய தீங்குநிரல் தடுப்பு மென்பொருள், இணையப் பாதுகாப்பு அணுகுமுறைகளை அரசாங்க அமைப்புகளுக்கு வழங்குவதும் இதில் அடங்கும்.
இவை குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் டாக்டர் ஸலிஹா எழுத்துபூர்வமாக விளக்கமளித்தார்.
ஒருவேளை இணைய ஊடுருவலால் பாதிப்பு ஏற்பட்டால் சேவைத் தொடர்ச்சித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் தேசிய இணைய ஒருங்கிணைப்பு, தளபத்திய நிலையம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பல அடுக்கு அடையாளம் காணும் முறையை நடைமுறைப்படுத்த நிலையம் திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, உத்தேச பாதுகாப்பு மிரட்டல்கள் அரசாங்க அமைப்புகளின் கட்டமைப்புகளுக்குப் பரவாமல் இருக்க அடிக்கடி மறுஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மலேசிய அரசாங்க அமைப்புகளைக் குறிவைத்து 1,633 இணைய ஊடுருவல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,378ஆக இருந்தது.