தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன நுழைவு அனுமதி வில்லை இன்றி ஜோகூர் சென்ற 1,500 சிங்கப்பூரர்களுக்கு அபராதம்

2 mins read
d549ac60-c01a-4741-ba34-17331b08b0d1
வாகன நுழைவு அனுமதி வில்லை பொருத்தப்படாத சிங்கப்பூர் வாகனங்களுக்கு ஜோகூர் அதிகாரிகள் அபராதம் விதித்ததனர். - படம்: ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களில் ‘விஇபி’ எனப்படும் வாகன நுழைவு அனுமதி வில்லை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்பில் உள்ளது.

இந்நிலையில், வாகன நுழைவு அனுமதி வில்லை இல்லாமல் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்குள் நுழைந்ததற்காக ஏறத்தாழ 1,500 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூரின் சாலைப் போக்குவரத்துத் துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தது.

அபராதம் விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு விதிமுறை நடைமுறையில் இருப்பது தெரியவில்லை என்று ஜோகூர் சாலைப் பாதுகாப்புத் துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் கிஃப்லி மா ஹசான் கூறினார்.

1,489 ஓட்டுநர்களுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 445,000 ரிங்கிட்டுக்கும் (S$135,780) அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“விதிமீறல் சகித்துக்கொள்ளப்படாது. விதிமீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அபராத தொகையைச் சம்பவ இடத்திலேயே செலுத்த வேண்டும்,” என்று திரு கிஃப்லி கூறினார்.

“அபராதம் விதிக்கப்பட்டவர்களில் ஓர் ஓட்டுநர் மட்டும் ஒத்துழைக்கவில்லை. அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்ய முற்பட்டபோது அவர் அபராதத்தைச் செலுத்த இணங்கினார். அதுமட்டுமல்லாது, வாகன நுழைவு அனுமதி வில்லைக்கும் பதிவு செய்துகொண்டார்.

ஜோகூர் பாருவுக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களைச் சோதனையிட்ட பிறகு, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை இணைக்கும் ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடியின் வெளிவாயில் அருகே செய்தியாளர்களிடம் திரு கிஃப்லி பேசினார்.

வாகன நுழைவு அனுமதி வில்லைகள் செல்லுபடியானவையா என்பதை உறுதி செய்ய தமது அதிகாரிகள் பயன்படுத்தும் சாதனங்களைச் செய்தியாளர்களிடம் அவர் காட்டினார்.

சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் இரண்டு நில வழி சோதனைச்சாவடிகளிலும் ஜோகூரில் உள்ள மற்ற இடங்களிலும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கி 33 நாள்களில் குறைந்தது 14,379 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையிடப்பட்ட வாகனங்களில் 90 விழுக்காட்டு வாகனங்கள் செயல்பாட்டில் உள்ள வாகன அனுமதி வில்லையைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாகத் திரு கிஃப்லி குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஓட்டுநர்கள் அதிகம் செல்லும் இடங்களில் சோதனைப் பணிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் கூறினார். ஆனால் இடங்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

மலேசியாவுக்குள் நுழையும்போதும் அந்நாட்டிலிருந்து வெளியேறும்போது சிரமமில்லாமல் இருக்க, வாகன நுழைவு அனுமதி வில்லைக்குப் பதிவு செய்து அது செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திரு கிஃப்லி வலியுறுத்தினார்.

ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி மொத்த 277,930 வாகன நுழைவு அனுமதிச் வில்லைகள் சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்