கியவ்: உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக ஏறக்குறைய 155 சீன நாட்டவர்கள் சண்டையிடுவது குறித்து உக்ரேனிய உளவுத்துறையிடம் தகவல் இருந்ததாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் முன்னேறும் கிழக்கு உக்ரேனில் சீன நாட்டவர்கள் இருவர் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஏப்ரல் 9) திரு ஸெலென்ஸ்கி பேசினார்.
சீனக் குடிமக்கள் போர்க்களத்தில் இறக்கப்பட்டுள்ளது குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேசும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
சமூக ஊடகம் வாயிலாக சீன நாட்டவர்களை ரஷ்யா சேர்க்கிறது எனவும் இதுகுறித்து சீன அதிகாரிகளுக்குத் தெரியும் எனவும் திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
போரிடும் சீன நாட்டவர்களின் பெயர்கள், அவர்கள் பிறந்த தேதி, அவர்கள் சேர்க்கப்பட்டுள்ள ரஷ்ய ராணுவப் பிரிவுகள் குறித்த பட்டியல்களை உக்ரேனின் பாதுகாப்புச் சேவை தொகுத்துள்ளதாக திரு ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவுக்காகப் போரிடும் சீன நாட்டவர்கள், சீனாவிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றனரா என்பது குறித்து உக்ரேன் ஆராய முற்பட்டதாகவும் திரு ஸெலென்ஸ்கி மேலும் சொன்னார்.
“இந்த சீன விவகாரம் கடுமையானது. உக்ரேன் மண்ணில் உக்ரேனியர்களுக்கு எதிராக 155 சீன நாட்டவர்கள் சண்டையிடுகின்றனர். இதுகுறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இதில் இன்னும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்றார் திரு ஸெலென்ஸ்கி.