சிங்கப்பூரின் சொத்து விற்பனை நிறுவனமான புராப்பர்ட்டிகுரு, இவ்வாண்டு ஜூன் 30 வரையிலான 2வது காலாண்டில் 16.1 மில்லியன் டாலர் நிகர நட்டத்தைச் சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய இதே காலகட்டத்தில் அதற்கு 6.5 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
இருந்தாலும் அந்நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வருமானம் 10.3 விழுக்காடு கூடி $40.7 மில்லியனை எட்டியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் இது $35.4 மில்லியாக இருந்தது.
மலேசியா, வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட சந்தை நிலவரம் சாதமாக இருந்ததால் வருமானம் கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் சந்தை மட்டும் கடந்த ஆண்டின் 21.5 மில்லியன் வெள்ளியிலிருந்து 16 விழுக்காடு கூடி $25 மில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது. சொத்து முகவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சொத்து முகவர்களின் சராசரி வருமானமும் இரண்டாவது காலாண்டில் கூடியது. இதன்படி ஒரு முகவரின் சராசரி வருமானம் 17 விழுக்காடு கூடியது. முகவர்களின் எண்ணிக்கையும் 16,577க்கு அதிகரித்தது.
இதற்கு அடுத்ததாக மலேசிய சொத்துச் சந்தை வருமானம் கூடுவதற்கு உதவியிருக்கிறது. இச்சந்தையினால் மட்டும் 12 விழுக்காடு வருமானம் கூடியது. வியட்னாமின் சந்தை, 3.6 விழுக்காடு வருமானத்தை கூட்டியிருக்கிறது.

