சவூதி அரேபிய தொழிற்சாலை தீ விபத்தில் 16 பங்ளாதேஷ் ஊழியர்கள் மரணம்

சவூதி அரேபிய தொழிற்சாலை தீ விபத்தில் 16 பங்ளாதேஷ் ஊழியர்கள் மரணம்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

10 Aug 2026 - 4:50 pm

1 mins read

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகரில் இயங்கும் ‘சோஃபா’ இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) ஏற்பட்ட மிகக் கடுமையான தீ விபத்தில் 16 பங்ளாதேஷ் ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அந்த துயரச் சம்பவத்தைப் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

முஸா சனைய்யா தொழிற்பேட்டைப் பகுதியில் அந்தத் தீ விபத்து நடந்தது.

பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரியாத்தில் அதன் தூதரகத்தின் அதிகாரிகள் சவூதி அரேபிய அரசாங்க அதிகாரிகளுடன் மறைந்த ஊழியர்களின் உடல்களை நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் நலன், பணியமர்த்தல் துறையின் அமைச்சர் அரிஃபுல் ஹக் சவுத்ரி உயிரிழந்தோரின் உடல்களை உடனே பங்ளாதேஷுக்குக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த ஊழியர்களுக்கு அரசாங்க உதவியும் இழப்பீட்டுத் தொகையும் வழங்க பங்ளாதேஷ் தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சவூதி அரேபியாவில் 3.5 மில்லியன் பங்ளாதேஷ் மக்கள் வாழ்கின்றனர்.

ஆக அதிக அளவிலான பங்ளாதேஷ் ஊழியர்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி அங்கு பணியாற்றுவதோடு ஏறத்தாழ S$3.45 பில்லியன் (US$2.7 பில்லியன்) மதிப்புள்ள பணத்தைப் பரிவர்த்தனை வழியாக மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாடாக்காதீவிபத்துமரணம்