விமானத்தில் ஏறி வெளிநாடு சென்று பிச்சையெடுக்க முயன்ற 16 பேர் கைது

1 mins read
fe25e408-dbe3-4a55-a10d-84be40a6960a
மாதிரிப்படம்: - பிக்சபே

இஸ்லாமாபாத்: பக்தர்கள் என்ற போர்வையில் விமானத்தில் ஏறி சவூதி அரேபியா சென்று பிச்சையெடுக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி, பாகிஸ்தானில் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், முல்தானிலிருந்து சவூதி செல்லவிருந்த விமானத்தில் ஏறிய அந்த 16 பேரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, விமானத்திலிருந்து அப்புறப்படுத்தியதாக ‘டான்’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அந்த 16 பேரில் ஒரு குழந்தையும் அடங்கும். எஞ்சியோரில் நால்வர் ஆண்கள், 11 பேர் பெண்கள். அவர்கள் மெக்காவிற்கு உம்ரா யாத்திரை செல்வதாகக் கூறி விசா பெற்றிருந்தனர்.

குடிநுழைவு நடைமுறையின்போது தாங்கள் பிச்சையெடுப்பதற்காக சவூதி செல்வதாக ஒப்புக்கொண்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும், பிச்சையெடுப்பதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் பாதியைத் தங்களது பயணத்திற்கு ஏற்பாடு செய்த முகவர்களுக்குத் தருவதாகவும் அவர்கள் உறுதியளித்திருந்தனர்.

வெளிநாடுகளில் பிச்சையெடுப்பதற்காகப் பாகிஸ்தானிலிருந்து கள்ளத்தனமாகப் பலர் கடத்தப்படுகின்றனர் என்று அந்நாட்டின் வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்க்கான செனட் குழு அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“யாத்திரை செல்வதாகக் கூறி, பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிக்கடி செல்கின்றனர். உம்ரா விசா பெற்று சவூதி செல்லும் பலர், அங்கு சென்றபிறகு பிச்சையெடுப்பதில் ஈடுபடுகின்றனர்,” என்று அக்குழு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்