புதிதாக 16 பேருக்கு கிருமித்தொற்று

புதிதாக 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
fd4ea925-a1cf-4fbb-ae76-f23dfa2a46b2
சிங்கப்பூரின் வாட்டர்லூ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் வெளியே முகக்கவசம் அணிந்திருக்கும் பொது மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 30ஆம் தேதி) புதிதாக 16 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து, மொத்த பாதிப்பு 62,579ஆக அதிகரித்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஐவர் சமூகத்தில் உள்ளவர்கள்.

அவர்கள் ஐவரும் முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கும் கிருமித்தொற்று உறுதியானது. அவர்களில் அறுவர்க்கு இங்கு வந்ததும் கொரோனா தொற்றி இருந்தது கண்டறியப்பட்டது.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் இருந்தபோது எஞ்சிய ஐவர்க்கும் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

முன்னதாக, நேற்று முன்தினம் சமூகத்தில் கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் மூவர் சாங்கி பொது மருத்துவமனை குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் எஞ்சிய இருவரும் புளோக் 105 ஹெண்டர்சன் கிரசென்ட் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோர் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

அந்த ஐவரில் நால்வர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இரு வாரங்களுக்குமுன் சமூகத்தில் 104 பேரைக் கிருமி தொற்றிய நிலையில், கடந்த வாரம் அது 76ஆகக் குறைந்துவிட்டது என்று அமைச்சு நேற்று குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் 36 பேரும் தொற்று கண்டிருந்தபோது வேறு பிரச்சினைகளால் 15 பேரும் இறந்துவிட்டனர்.