ஜகார்த்தா: இந்தோனீசியத் தீவான சுலாவெசியில் உள்ள தாதிமை இல்லமொன்றில் மூண்ட தீயில் சிக்கி 16 பேர் மாண்டதாகவும் மூவர் காயமுற்றதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (டிசம்பர் 29) கூறியுள்ளார்.
வடசுலாவெசியின் தலைநகர் மனாடோவில் உள்ள தாதிமை இல்லமொன்றில் நெருப்புப் பற்றியதாகத் தீயணைப்பு வீரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 8.31க்குத் தகவல் கிடைத்தது. நகரத்தின் தீயணைப்பு, மீட்பு அமைப்பின் தலைவர் ஜிம்மி ரோட்டின்சுலு தெரிவித்தார்.
“16 பேர் மாண்டனர்; மூவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
மாண்டோரில் பலரின் சடலங்கள் அவர்களின் அறையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகத் திரு ஜிம்மி சொன்னார். தீச்சம்பவம் ஏற்பட்டபோது மூத்த குடியிருப்பாளர்கள் பலர் அறைகளில் ஓய்வெடுத்திருக்கக்கூடும் என்றார் அவர்.
12 பேரைக் காயமின்றி அதிகாரிகள் மீட்டதாகவும் பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் திரு ஜிம்மி தெரிவித்தார்.
நெருப்பால் சூழப்பட்டிருந்த தாதிமை இல்லத்திலிருந்து முதியவர் ஒருவர் வெளியேறுவதற்கு உள்ளூர்வாசிகள் உதவியதை மெட்ரோ தொலைக்காட்சி வெளியிட்ட படங்களில் காணமுடிந்தது.
இந்தோனீசியாவில் கடுமையான தீச்சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
இம்மாதம் (டிசம்பர் 2025) இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஏழு தளங்களைக் கொண்ட அலுவலகக் கட்டடத்தில் மூண்ட தீயில் 22 பேர் மரணமடைந்தனர்.

