மலாக்கா: இவ்வாண்டு ஜனவரியில் மொத்தம் 16 காவல்துறை அதிகாரிகளும் சில அரசு ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக புக்கிட் அமானின் நேர்மை, தரநிலை இணக்கத் துறை இயக்குநர் அஸ்ரி அகமது தெரிவித்தார்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் நால்வர் காவல்துறையில் தலைமைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர்கள் என்றும் மீதமுள்ளோர் கீழ்நிலைப் பணியாளர்கள் என்றும் அவர் சொன்னார். மலாக்கா காவல் துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடந்த விழாவில் கலந்துகொண்டபிறகு செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றார் அவர்.
அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான நேரங்களில் பணிநீக்கம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


