மத்திய கிழக்கிலிருந்து 164 மலேசியர்கள் மீட்பு

மத்திய கிழக்கிலிருந்து 164 மலேசியர்கள் மீட்பு

1 mins read
ffc4fc0a-1125-4055-90c4-1a6386ac713c
மலேசியா ஏர்லைன்சின் சிறப்பு விமானத்தில் மலேசியர்களுடன் தாய்லாந்து, இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டனர். - படம்: பெர்னாமா

ஜெட்டா: போர்ப்பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வட்டாரத்தில் சிக்கியிருக்கும் மலேசியர்கள் மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 164 மலேசியர்கள் புதன்கிழமை (மார்ச் 11) தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

அவர்கள் அனைவரும் சவூதி அரேபியா, சிரியா, ஜோர்தான், கத்தார் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர். மலேசியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகளில் அந்த 164 மலேசியர்களும் இருந்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

எஞ்சிய அறுவரில் தாய்லாந்து குடிமக்கள் ஐவர், இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவர் எனவும் அச்செய்தி குறிப்பிட்டது.

ஈரானை அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் தாக்கத் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்கிலிருந்து மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

மலேசியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தை உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) இரவு 8.35 மணிக்குச் சென்றடைந்ததாகக் கூறப்பட்டது.

மலேசியர்களுடன் அந்த விமானம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்