தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேங்காக் உயர்மாடி கட்டட சரிவு தொடர்பில் 17 கைதாணைகள்

2 mins read
21a46fc8-dd95-4ea8-b7c5-6610ac7be579
மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் அதிர்வால் பேங்காக்கில் இருந்த 30 மாடி கட்டடம் தரைமட்டமானதில் பலர் பலியாயினர். - படம்: ஏஎஃப்பி

பேங்காக் - தாய்லந்தைக் கடந்த மார்ச் மாதம் உலுக்கிய நிலநடுக்கத்தில் உயர்மாடி கட்டடம் ஒன்று சரிந்துவிழுந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் 17 கைதாணைகளைப் பிறப்பித்துள்ளது.

அண்டை நாடான மியன்மாரைப் பதம் பார்த்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லந்திலும் உணரப்பட்டது. அதில் அரசு தணிக்கை அலுவலக 30 மாடி கட்டடம் சரிந்தது.

கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து 89 சடலங்களை மீட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஏழு சடலங்கள் குறித்து தகவல் இல்லை.

கட்டடத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், கட்டடக் கண்காணிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தோரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டதாக சம்பவம் குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

கட்டடத்தில் இருந்த மின்தூக்கிக் கட்டுமானத்தில் கோளாறுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்ததைத் தாய்லாந்து ஊடகங்கள் குறிப்பிட்டன. தாய்லந்து அதிகாரிகள் கட்டடம் சரிந்ததற்கான காரணம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை இன்னும் வெளியிடவில்லை.

பலமான அதிர்வுகளால் பேங்காக்கில் உள்ள உயர்மாடிக் கட்டடங்கள் பலமாக அசைந்ததோடு கூரை மேலிருந்த நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் கொட்டியதைக் காணொளிகள் காட்டின.

சரிந்து விழுந்த அரசு தணிக்கை அலுவகலத்தைத் தவிர பேங்காக்கில் உள்ள கட்டடங்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

இரண்டு பில்லியன் பாட் செலவில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் தரைமட்டமானது. கட்டடம் சரிந்தபோது 400க்கும் அதிகமான ஊழியர்கள் கட்டுமானத் தளத்தில் இருந்தனர்.

இந்நிலையில், அரசு தணிக்கை அலுவலகக் கட்டடம் சரிந்ததன் தொடர்பில் இத்தாலிய-தாய் டிவெலப்மண்ட் நிறுவனத்தின் தலைவர் பிரெம்சாய் கர்னசுட்டா காவல்நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.

‌திரு பிரேம்சாய் இன்று காலை 8 மணியளவில் வழக்கறிஞர்களுடன் தனியார் வாகனத்தில் காவல் நிலையத்துக்கு வந்தார்.

தொடக்கக் கட்ட வடிவமைப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கிய பொறியாளர் பிமில் ‌‌செரொன்யிங், இத்தாலிய-தாய் டிவெலப்மண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஆகியோரும் தங்கள் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்துக்கு வந்தனர்.

குறிப்புச் சொற்கள்