கோலாலம்பூர்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து 17 மலேசியர்கள் தங்கள் தாயகத்தை அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஈரானிலிருந்து பத்திரமாக வெளியேறி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மலேசியாவை அடைந்தனர்.
ஈரானிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு மலேசியாவை அடைந்த 24 பேரில் இந்த 17 பேரும் அடங்குவர்.
அந்த 24 பேரில் மலேசியர்கள் சிலருக்கு மிக நெருங்கிய உறவுக்காரர்களான ஆறு ஈரானியர்களும் சிங்கப்பூரர் ஒருவரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், தாய்லாந்து தலைநகர் பேங்காக் வழியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் தரையிறங்கியது.
அவர்களை வரவேற்க மலேசிய வெளியுறவு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (இருதரப்பு உறவுகள்) அகமது ரோசியான் அப்துல் கனி விமான நிலையத்துக்குச் சென்றார்.
மலேசியா திரும்ப அவர்கள் அனைவரும் மேற்கொண்ட பயணம் சவால்மிக்கதாக இருந்தபோதிலும் அது வெற்றிகரமாக அமைந்ததாக மலேசியா திரும்பியோருக்குத் தலைமை தாங்கி அவர்களை வழிநடத்திய ஈரானுக்கான மலேசியத் தூதர் கைரி ஓமார் கூறினார்.
ஈரானியத் தலைநகர் டெஹ்ரானிலிருந்து நிலம் வழியாக வெளியேறியதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அது மிகவும் நீண்ட பயணம். சாலை வழியாக 24 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்தோம். ஈரான்-துர்க்மெனிஸ்தான் எல்லையில் ஓர் இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார் திரு கைரி.
அந்த 24 பேரையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகளை டெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் ஒருங்கிணைத்தது.
1,000 கிலோ மீட்டருக்கும் அதிகம் பயணம் செய்து அவர்கள் அனைவரும் துர்க்மெனிஸ்தான் எல்லையை அடைந்தனர்.
“துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அந்நாட்டுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாங்கள் எல்லையிலிருந்து நேராக எஷ்கபாட் விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மலேசியா வந்தடைந்தோம்,” என்று திரு கைரி தெரிவித்தார்.
ஏறத்தாழ 12 மலேசியர்கள் ஈரானில் இன்னும் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் அல்லது ஈரானியர்களைக் திருமணம் செய்துகொண்ட மலேசியர்கள்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக திரு கைரி கூறினார்.
“அவர்களது இருப்பிடம், நடமாட்டம் ஆகியவற்றை எங்களால் முடிந்தவரை கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பு நிமித்தமாக அவர்களில் சிலர் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேறி வேறோர் இடத்துக்கு மாறியுள்ளனர். எங்களால் முடிந்த அளவுக்கு அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்றார் மலேசித் தூதர் திரு கைரி ஓமார்.