பெட்டாலிங் ஜெயா: குடிநுழைவுக் குற்றச்செயல்களின் தொடர்பில், சிங்கப்பூரர்கள் இருவர் உட்பட 17 சந்தேக நபர்களை மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு கைதுசெய்துள்ளது.
அதுகுறித்து அமைப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. ஜோகூர் பாருவின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் திங்கட்கிழமை அந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கட்டடத்திற்குள் அனுமதியின்றி, முறையான ஆவணங்களின்றி நுழைய முற்பட்டபோது சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
“கைதானோரில் 11 பேர் இந்தோனீசியர்கள், இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் எகிப்தியர். எஞ்சிய மூவரும் மலேசியர்கள். அவர்கள் ஓட்டுநர்களாய்ச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமைப்பு தெரிவித்தது.
“சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்டுசெல்லும் அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அத்துமீறுவோர்மீது வாகனப் பறிமுதல் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அறிக்கை தெரிவித்தது.

