தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,732 பேரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிய மலேசியா

1 mins read
a6c76f4c-8c79-4181-b99b-5c842cba4f81
மாதிரிப்படம்: - ஊடகம்

கொழும்பு: இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் இலங்கையைச் சேர்ந்த 1,608 கள்ளக் குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே மலேசியா திருப்பி அனுப்பியது.

இந்நடவடிக்கை மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பியனுப்பும் திட்டத்தின்கீழ் இடம்பெற்றதாகக் கோலாலம்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.

முன்னதாக, 2024 ஜனவரி 1 - பிப்ரவரி 28 வரையிலான காலகட்டத்திலும் சட்டவிரோதமாகக் குடியேற முயன்றதாகக் கூறி, 124 பேர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒட்டுமொத்தத்தில், இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 1,732 பேர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மலேசியாவில் கள்ளத்தனமாகக் குடியேறுவோர், தங்களின் தாய்நாட்டிற்குத் திரும்ப தாமாக முன்வந்தால், அவர்களுக்குச் சட்ட விலக்கும் நிதி நிவாரணமும் அளித்து, அவர்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நோக்கில் புலம்பெயர்ந்தோரைத் திருப்பியனுப்பும் திட்டத்தை மலேசியா தொடங்கியது.

குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள், மருத்துவ உதவி தேவைப்படுவோர், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர்மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்