ஈப்போ விமான நிலையத்தை விரிவுபடுத்த $18.3 மி. ஒதுக்கீடு

1 mins read
6efae8ec-7d0b-468b-a748-d253c6134c4f
ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையம். - படம்: wikiwand.com / இணையம்

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு 60 மில்லியன் ரிங்கிட் (18.3 மில்லியன் வெள்ளி) நிதியை ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மலேசியாவின் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் ங்கா கோர் மிங் அதனைத் தெரிவித்தார் என்று மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, பேராக்வாசிகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் சிறப்பு சீனப் புத்தாண்டுப் பரிசு என்று திரு ங்கா குறிப்பிட்டார்.

“இந்தத் (விரிவுபடுத்துதல்) திட்டம் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்படும். முதல் கட்டத்துக்கு எட்டு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்டத்துக்கு 52 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்,” என்று திரு ங்கா தெரிவித்தார்.

“விமான நிலையத்தின் நுழைவாயில்கள், வெளிவாயில்களை விரிவுபடுத்த ஈப்போ நகர மன்றம் மேலும் நான்கு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது திரு ங்கா இவ்விவரங்களை வெளியிட்டார்.

சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்தால் அதிகபட்சமாக 500,000 பயணிகளை மட்டுமே கையாள முடியும்; ஆனால், சென்ற ஆண்டு அது 512,000 பயணிகளைக் கையாண்டதாக அவர் தெரிவித்தார். அதனால் விரிவுபடுத்தும் பணிகள் அவசியம் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்