வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த நாதன் தாமஸ் என்ற இளையர், உலகின் மிக இளைய பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
18 வயது 346 நாள்களில் அச்சாதனையை எட்டியதன் மூலம், 306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த வரலாற்றை அவர் மாற்றியமைத்துள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த 1717ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர் கோலின் மக்லாரின் தமது 19வது வயதில் பேராசிரியரானதே வரலாற்றுச் சாதனையாக இருந்தது. அதனை நாதன் தாமஸ் தற்போது முறியடித்துள்ளார்.
மேலும், 2008ஆம் ஆண்டில் தமது 18வது வயதில் உலகின் மிக இளம் வயதுப் பெண் பேராசிரியராகச் சாதனை படைத்த அலியா சாபூரைவிட நாதன் தாமஸ் 16 நாள்கள் இளையவர் ஆவார்.
இதன்மூலம், ஆண், பெண் என இருபாலரிலும் உலகின் மிக இளம் வயதுப் பேராசிரியர் எனும் பெருமையை அவர் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
நாதன் தாமஸ் தமது 10வது வயதிலேயே பள்ளிப் படிப்புடன் சேர்த்து மியாமி டேட் கல்லூரியிலும் படிப்பைத் தொடங்கினார்.
14வது வயதில் புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
மின் பொறியியல் துறையில் இளநிலை, முதுநிலை ஆகிய இரு பட்டங்களையும் 18 வயதிற்குள் நிறைவு செய்து சாதனை படைத்தார்.
தற்போது அவர் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் இந்த அரிய சாதனைக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


