பினாங்கு: பினாங்கு சென்ட்ரலில் சனிக்கிழமை (நவம்பர் 2) விரைவுப் பேருந்து ஒன்றில் சென்ற 18 வயது இளையர் ஒருவர், மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.
ஆடவர் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்ததாக பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு இரவு 7.40 மணிக்கு தகவல் வந்ததாக காவல்துறை உதவி ஆணையர் அன்வார் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் இடது கைவிரல்களில் தீக்காயங்கள் இருந்தன என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. கைப்பேசியை மின்னூட்டம் செய்தபோது அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது,” என்றார் அவர்.
கேஎல் சென்ட்ரலுக்குச் செல்லும் விரைவுப் பேருந்தில் அந்த இளையர் ஏறியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார். மாலை 6 மணியளவில் அந்த இளையரிடமிருந்து அலறல் சத்தம் கேட்டது. அவர் வாயிலிருந்து நுரை தள்ளியது. அதையடுத்து, உதவி கோரி ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.
“மாலை 6.20 மணிவாக்கில் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்றார் உதவி ஆணையர் அன்வார்.
செபாராங் ஜெயா மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், அந்த இளையருக்கு வேறெந்த காயமும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டது.