ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் 19 இந்தியக் கப்பல்கள்

கப்பல்களில் கிட்டத்தட்ட 500 மாலுமிகள் உள்ளனா்

ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் 19 இந்தியக் கப்பல்கள்

2 mins read
fb44e9c9-521b-4789-b200-fced258d1a33
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கிட்டத்தட்ட 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன.  - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் (எல்பிஜி) இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய 19 சரக்குக் கப்பல்கள், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கித் தவிக்கின்றன.

அதுகுறித்த தகவல்களை இந்தியாவின் மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய வழியாக இருக்கும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. 

இதனால் உலக நாடுகள் போதிய கச்சா எண்ணெய், எரிவாயு இல்லாமல் சிரமத்தில் உள்ளன.

நீரிணையைக் கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காகத் தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பல்வேறு அமைச்சுகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் திங்கட்கிழமை (மார்ச் 30) நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் பேசிய மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சின் சிறப்புச் செயலா் ராஜேஷ் சின்ஹா, “கச்சா எண்ணெய், எல்பிஜியுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய 19 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கித் தவிக்கின்றன’ என்றாா்.

“அந்தக் கப்பல்களில் கிட்டத்தட்ட 500 மாலுமிகள் உள்ளனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா். இதுவரை இந்தியக் கொடி பறக்கும் 8 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து வந்துள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் 94,000 டன் எல்பிஜியுடன் இரண்டு கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன,” என்றார் ராஜேஷ் சின்ஹா. 

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கிட்டத்தட்ட 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. 

இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்கக் கட்டுப்பாடு எனப் போர்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைக் கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்