ஜகார்த்தா: இந்தோனீசியாவின் முன்னாள் ஊழல் தடுப்பு அரசாங்க வழக்கறிஞரின் வீடு, அலுவலகங்களிலிருந்து கோடிக்கணக்கான பணத்தையும் 70 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதையடுத்து, அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர் என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தோனீசியா நீண்டகாலமாக ஊழல் புகார்களில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த நிலையில் அண்மைய ஆண்டுகளாக பல அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் தலைமை ஊழல் தடுப்பு அரசாங்க வழக்கறிஞராகப் பணியாற்றியபோது ஃபெப்ரி அத்ரியான்ஸ்யா மோசடியில் ஈடுபட்டதாக தலைமைச் சட்ட அலுவலகத்தின் உதவி தலைமை வழக்கறிஞர் ரூடி மார்கோனோ வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜகார்த்தாவிற்கு வெளியே உள்ள அவரது வீடு உட்பட அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலை ஒழிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த ஃபெப்ரி ஜூலை 11ஆம் தேதி பதவி விலகினார்.
சோதனையின்போது, பல மில்லியன் மதிப்புள்ள 74 கிலோகிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல மணி நேர விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஃபெப்ரி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் சொன்னார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர், சட்டபூர்வமான நடவடிக்கைகள் நேர்மையான முறையில் நடைபெறும் என்று தனது கட்சிக்காரர் நம்புவதாகக் கூறினார்.
ஃபெப்ரிக்கு எதிரான இந்த விசாரணை காவல்துறையால் தொடங்கப்பட்டு, பின்னர் அவர் பணியாற்றிய முன்னாள் அலுவலகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

