ர‌ஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழப்பு

ர‌ஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

18 Nov 2026 - 2:39 pm

2 mins read

மாஸ்கோ: ர‌ஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று சைபீரியாவில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.

கெமரோவோ வட்டாரத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் பயணம் செய்தபோது ‘ஏஎன்-12’ வகை விமானம் விபத்துக்குள்ளானதாக ர‌ஷ்யத் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நடந்த அவ்விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ர‌ஷ்ய அமைச்சு கூறியது.

இது குறித்து ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

யகுனோவோ கிராமத்திற்கு அருகில் விமானம் விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட தீயை அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து அணைத்ததாக அவ்வட்டார ஆளுநர் இலியா செரெடியுக் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதி காவல் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட திரு செரெடியுக், ஹெலிகாப்டரும் மருத்துவ வசதிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். விசாரணை அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்ள உதவுவதே தற்போதைய முக்கியப் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான கண்காணிப்புக் கருவி காட்சிகளில், தொலைவில் வானிலிருந்து ஒளியுடன் கூடிய பொருள் ஒன்று கீழே விழுவதும் பின்னர் வெடிப்பு ஏற்பட்டு வானம் ஒளிர்வதும் பதிவாகின.

அந்தக் காணொளியின் நேரம், தேதி ஆகியவற்றை பிபிசி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தின. செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இடத்தையும் ராய்ட்டர்ஸ் உறுதி செய்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் சரக்குகள் ஏதேனும் இருந்தனவா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆயுதங்கள், படைவீரர்களைக் கொண்டு செல்லவும்,தேடல், மீட்புப் பணிகளுக்கும் ரஷ்ய ராணுவத்தால் ‘ஏஎன்-12’ வகை விமானங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்