காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாகத் தொட்ட குழுவில் இடம்பெற்றிருந்தோரில் கடைசி நபரும் இப்போது காலமாகிவிட்டார்.
காஞ்சா ஷெர்ப்பா எனும் அவர் நேப்பாளத்தில் காலமானதாக அவரின் குடும்பம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது. ஷெர்ப்பாவுக்கு வயது 92.
நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருக்கும் தனது வீட்டில் ஷெர்ப்பா காலமானதாக அவரின் பேரர் தென்ஸிங் சொக்யால் ஷெர்ப்பா கூறினார். ஷெர்ப்பாவுக்குத் தொண்டையில் பிரச்சினை இருந்ததாகவும் மற்றபடி அவருடைய வயதைக் கருத்தில்கொள்ளும்போது அவருக்கு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் தென்ஸிங் தெரிவித்தார்.
நேப்பாள மலையேறிகள் சங்கத் தலைவர் ஃபுர் கெல்ஜே ஷெர்ப்பா ஃபேஸ்புக்கில் ஷெர்ப்பாவுக்கு மரியாதை தெரிவித்துக்கொண்டார். ஷெர்ப்பாவின் மறைவு, நேப்பாளத்தின் மலையேறி சமூகத்துக்குப் பேரிழப்பு என்றார் அவர்.
1932ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலையை இணைக்கும் நாம்சே பஸார் பகுதியில் ஆங் ஃபுர்பா ஷர்ப்பா என்ற பெயரில் பிறந்த காஞ்சா ஷர்ப்பா, பதின்ம வயதில் வேலை தேடி வீட்டிலிருந்து தப்பியோடினார். இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்குப் போன அவர் மலையேற்றத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
அங்கு அவர் தென்ஸிங் நோர்கே என்ற மலையேறியைச் சந்தித்தார். தென்ஜிங் நோர்கே, எட்மண்ட் ஹிலரியின் மலையேற்றக் குழுவுக்கு ஆதரவளித்த 103 மலையேறிகளில் ஒருவராக சேர ஷெர்ப்பாவுக்கு உதவினார்.
எட்மண்ட் ஹிலரி, நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாகத் தொட்ட சாதனைக்குரியவர்கள்.