கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், படுதோல்வியில் முடிந்த 1எம்டிபி விவகாரம் குறித்து மலேசிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அவரின் மகன் முகம்மது நிஸார் அக்டோபர் 24ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்றக் கட்டடத்தில் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் தாம் இருந்த சமயத்தில் 1எம்டிபி ஊழல் விவகாரம் நடந்ததை எண்ணித் தாம் ஆழ்ந்த துயருற்றிருப்பதாக நஜிப் கூறியுள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில் புதிதாகத் தெரியவந்துள்ள தகவல்களை, சிறையில் இருந்தவாறு கடந்த 26 மாதங்களாக அறிந்துவரும் நிலையில் இவ்வாறு அறிக்கை விடுக்க அவர் முடிவுசெய்ததாகக் கூறினார்.
1எம்டிபியில் ‘துயரமான, மனசாட்சியற்ற வெறித்தனம்’ எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறிந்து தாம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.
“அரசியல்ரீதியாக நான் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டேன். ஆனால், நான் இதில் சூத்திரதாரியும் அல்ல; அண்மைய நிகழ்வுகள் காட்டுவதுபோல் நான் ஜோலோவுடன் கூட்டுசேரவும் இல்லை. அதனால், சட்டரீதியாக நான் தண்டிக்கப்படக்கூடாது,” என்றார் நஜிப்.