கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக், அவருக்கு எதிரான 1எம்டிபி நிதி மோசடி வழக்கில் இன்று தீர்ப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்.
அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் ஏற்கெனவே அனுபவித்து வரும் சிறைத் தண்டனையுடன் மேலும் சில ஆண்டுகள் கூட வாய்ப்புள்ளது. அவர், தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
திரு நஜிப், 72, 1எம்டிபி நிதியிலிருந்து பல நூறு மில்லியன் டாலர் சூறையாடப்பட்ட வழக்கில் நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளையும் 21 பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.
மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
1எம்டிபி விவகாரத்தில் முக்கிய வழக்காகக் கருதப்படும் இந்த நீண்டகால விசாரணையில் நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்வேரா, காலை 9.00 மணியளவில் தனது தீர்ப்பை வழங்குவார். இது, சுமார் 2.28 பில்லியன் மலேசிய ரிங்கிட் (S$723 மில்லியன்) தொடர்பான மோசடி வழக்காகும்.
திரு நஜிப், ஒரு பிரதமராக, நிதியமைச்சராக 1எம்டிபியின் ஆலோசகரான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசுத் தரப்பிலிருந்து வங்கிப் பதிவுகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சாட்சியங்கள், ஆவணங்கள்ன ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய ஜோ லோ என்று அழைக்கப்படும் லோ டேயிக் ஜோ தேடப்பட்டு வருகிறார்.

