1எம்டிபி: $1.77 பில்லியன் சொத்துகளை மலேசியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

1எம்டிபி: $1.77 பில்லியன் சொத்துகளை மலேசியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

1 mins read
074653f6-29b8-4a31-bac0-f7d70d03c1a2
மலேசியப் பிரதமர் அலுவலக (சட்ட, நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள்) அமைச்சர் அஸாலினா ஒத்மான் சாயித். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழலின் மூலம் முறைகேடாகக் கையாளப்பட்ட நிதியிலிருந்து, இதுவரை 5.58 பில்லியன் ரிங்கிட்டுக்கும் ($1.77 பில்லியன்) அதிகமான மதிப்புள்ள சொத்துகளை அமெரிக்கா மலேசியாவிடம் ஒப்படைத்துள்ளது.

அத்தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலக (சட்ட, நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள்) அமைச்சர் அஸாலினா ஒத்மான் சாயித் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் ஒழிப்புப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் இங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தபோது அமைச்சர் அஸாலினா இவ்வாறு தெரிவித்தார்.

1எம்டிபி விவகாரத்துடன் தொடர்புடைய ரொக்கம், சொத்துகளில் அமெரிக்காவிடமிருந்து இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் பிற நாடுகளிடம் எவ்வளவு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் திரு லிம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், மலேசியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ள சொத்துகள் தவிர, 1எம்டிபி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பேரளவிலான நிதியும் சொத்துகளும் அமெரிக்காவிலும் சில வெளிநாடுகளிலும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன அல்லது பறிமுதல் செய்யும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

முடக்கப்பட்டுள்ள அல்லது பறிமுதல் செய்யும் சட்ட நடவடிக்கைகளில் உள்ள சொத்துகளின் துல்லியமான மதிப்பைத் தற்போது உறுதியாகக் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் காலப்போக்கில் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அச்சொத்துகளின் மதிப்பு மாறுபடும் என்பதாலும் தற்போதைக்கு அதன் மதிப்பை துல்லியமாக மதிப்பிட முடியாது என அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅமெரிக்கா1எம்டிபிசொத்து