ஹனோய்: வியட்னாம், அதன் வடகிழக்கு மாநிலமான குவாங் நின்னில் 51.5 டிரில்லியன் டோங் (2.55 பில்லியன் வெள்ளி) மதிப்பில் சுற்றுப்பயணிகளை ஈர்க்க சூதாட்டக்கூடம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
அதற்கு வகைசெய்யும் முதலீட்டுத் திட்டம் ஒன்றை அந்நாட்டின் நிதி அமைச்சு கையிலெடுத்துள்ளது. குவான் நின், யுனெஸ்கோ உலக மரபுடைமை இடம் என்ற அங்கீகாரம் பெற்ற ஹா லோங் பே உள்ள வட்டாரமாகும்.
வியட்னாமின் விஎன்எக்ஸ்பிரஸ் ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது. சூதாட்டக்கூடத்துக்கான முதலீட்டுத் திட்டப் பரிந்துரை அந்நாட்டுப் பிரதமர் ஃபாம் மின் சின்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது. வியட்னாமின் நிதி அமைச்சை மேற்கோள்காட்டி அது இத்தகவல்களை வெளியிட்டது.
ரிந்துரையின்கீழ் புதிய சூதாட்டக்கூடம் ஒன்று வேன் யென் கம்யூன் பகுதியில் உள்ள வேன் டோன் மாவட்டத்தில் அமைக்கப்படும். புதிய திட்டம் ஒன்றின்கீழ் வியட்னாமிய குடிமக்களை அந்த சூதாட்டக்கூட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று வியட்னாமிய நிதி அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
இதன் தொடர்பில் வியட்னாமில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட சில சூதாட்டக்கூடங்களில் அந்நாட்டுக் குடிமக்களை சூதாட அனுமதிக்கும் விதிமுறை சென்ற ஆண்டு நீட்டிக்கப்பட்டது.
புதிய சூதாட்டக்கூட பரிந்துரையின்கீழ் அதற்கான மொத்த முதலீட்டில் 7.7 டிரில்லியன் டோங் செலவை ஒரு முதலீட்டாளர் தரப்பு ஏற்றுக்கொள்ளும். வங்கிக் கடன் மூலம் எஞ்சிய தொகை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.