ஜோகூர் பாரு: போதைப்பொருள் கும்பலை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட சோதனைகளில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் தொடர்பில் 39 வயது உள்ளூர்வாசி ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்.
ஜோகூர் பாருவையும் ஜோகூரையும் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து பிப்ரவரி 16ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
மேலும், ஜோகூர் பாரு முழுவதும் நான்கு இடங்களில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11.15 மணி வரை சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சோதனையின்போது 39 வயது உள்ளூர்வாசி ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விவரித்தார்.
காவல்துறையினர் தற்போது டான் ஹுவா சீக் என்ற 34 வயது நபரைத் தேடி வருவதாகவும் அவரிடம் விசாரித்தால் காவல்துறைக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும் என அது நம்புவதாகவும் திரு குமார் சொன்னார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் கிட்டத்தட்ட 51,777 போதைப்புழங்கிகள் பயன்படுத்துவதற்குப் போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.