https://www.straitstimes.com/world/europe/26-million-die-annually-due-to-alcohol-who
ஜெனிவா: ஆண்டுதோறும் மதுவினால் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தாலும், அது “ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக” உள்ளதாக அது கூறியது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் போன்றவை ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் ஏற்படும் இருபதில் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது என்று அறிக்கை தெரிவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மது அருந்துவதால் 2.6 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக மதுபானமும் உடல்நலமும் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனத்தின் அண்மைய அறிக்கை குறிப்பிட்டது. அண்மைய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை அந்த ஆண்டு உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 விழுக்காடு.
அந்த இறப்புகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் ஆண்கள்.
2019ஆம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட இறப்புகளில் அதிகபட்ச விகிதமாக 13 விழுக்காட்டினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.
குடிப்பழக்கம் கல்லீரலின் பிரச்சினை, சில புற்றுநோய்கள் உட்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
மதுவினால் 2019ல் ஏற்பட்ட இறப்புகளிலும், 1.6 மில்லியன் பேர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
இவர்களில், 474,000 பேர் இதய நோய்களாலும், 401,000 பேர் புற்றுநோயாலும் 724,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
2019ஆம் ஆண்டில் 209 மில்லியன் மக்கள் மதுவுக்கு அடிமையாக வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 3.7 விழுக்காடு ஆகும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019ல் 5.5 லிட்டராக குறைந்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 15 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் மதுவிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறார்கள்.
ஆக அதிகமாக ஐரோப்பாவில் தனிநபர் நுகர்வு 9.2 லிட்டரும் அடுத்த நிலையில் அமெரிக்காவில் 7.5 லிட்டரும் உள்ளது.
வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியாவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த நுகர்வு உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.