உக்ரேனுக்கு $2.7 பில்லியன் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

உக்ரேனுக்கு $2.7 பில்லியன் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

படம்: ஏஎஃப்பி

19 Sep 2026 - 1:41 pm

2 mins read

வாஷிங்டன்: உக்ரேனின் ஆகாயத் தற்காப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான ராணுவச் சாதனங்களையும் சேவைகளையும் வழங்குவதற்கும் $2.7 பில்லியன் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த விற்பனை உறுதியானால், ஐரோப்பிய நாடுகளின் நிதிப் பங்களிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட ‘வெளிநாட்டு ராணுவ நிதி’ (எஃப்எம்எஃப்) ஆகியவற்றால் உக்ரேன் பயனடையும். இந்த நிதி, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கான மானிய உதவியாகப் பிற நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான கனிமவள ஒப்பந்தத்தின்கீழ் ‘உக்ரேனிய மறுசீரமைப்பு முதலீட்டு நிதி’ உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்த வெளிநாட்டு ராணுவ நிதித் தொகையானது 1:1 என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு நிதிக்கான அமெரிக்காவின் முதலீடாகக் கணக்கிடப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ராணுவ உதவித் தொகுப்பில் எஸ்-300 வகை ஏவுகணைகள், ஜிஏஎம்-67 வகை ஏவுகணைகள், விரிவாக்கப்பட்ட ஆகாயத் தற்காப்பு லேசர் உந்துகணைகள், ஏவுதள மாற்றியமைப்புக் கருவிகள், ஆளில்லா வானூர்தி எதிர்ப்புப் போர்க் கருவிகள் உள்ளிட்ட பல ஆயுதத் தளவாடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த முன்மொழியப்பட்ட விற்பனைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.

திரு டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகக் கூறியிருந்தார். இருப்பினும், 20 மாதங்கள் கடந்த நிலையிலும் போர் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, ரஷ்யா மீதான பொருளியல் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) ஒரு புதிய தடைச் சட்டத்தில் திரு டிரம்ப் கையெழுத்திட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஉக்ரேன்ராணுவம்உதவிவிற்பனைஒப்புதல்