சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர்ப் பகுதியில் பிளாஸ்டிக் தொட்டிகளில் மறைத்து நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் அந்நாட்டுக் காவல்துறையிடம் சிக்கியது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் போதைப்பொருளின் எடை 2.7 டன் என்று ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு சம்பவத்தில் இவ்வளவு அதிகமாக கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன்முறை.
“சிட்னியைச் சேர்ந்த ஒரு குற்றக் கும்பல், வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் இந்தப் போதைப்பொருளைக் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இறக்குமதி செய்திருக்கக்கூடும். பின்னர் அதனை விநியோகத்திற்காக சிட்னிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்,” என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
போதைப்பொருள் தொடர்பாக இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் எங்கிருந்து நாட்டிற்குள் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 724.44 மில்லியன் வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்குத் தொடர்புடையதாக நம்பப்படும் ‘எம்வி வெல்த்’ என்ற கப்பல், மேல் விசாரணைக்காக சாலமன் தீவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

