கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் நடத்தும் சிறுநிறுவனங்களுக்கான தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் 48 நிறுவனங்களுக்கு மொத்தம் 2.96 மில்லியன் ரிங்கிட் (S$890,000) மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் செய்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அந்நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களால் நடத்தப்படும் அந்நிறுவனங்களுக்கு தொழில் ஆலோசனைச் சேவைகள், ரிங்கிட்டிற்கு ரிங்கிட் என்ற அடிப்படையில் நிதியாதரவு என 100,000 ரிங்கிட்வரை ஆதரவு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மலேசிய சிறிய, நடுத்தர நிறுவனக் கழகம் அந்தத் தொழில் ஊக்குவிப்பு மானியத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இதனிடையே, தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மானியம் பெற வரும் ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படவுள்ளன. இம்முறை, குறைந்தபட்ச ஆண்டு விற்பனை எனும் விதிமுறை நீக்கப்படவுள்ளது.
“முன்னதாக, ஆண்டு விற்றுமுதல் 300,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக உள்ள நிறுவனங்கள் மட்டுமே அம்மானியத்திற்கு விண்ணப்பம் செய்யத் தகுதிபெற்றிருந்தன. இப்போது, அந்த விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெற வழிவகுக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை (மார்ச் 19) நடந்த குறு, சிறு, நடுத்தர நிறுவன நடுவம் திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், திட்டப்பணிகளை ஏற்கெனவே நிறைவுசெய்துள்ள நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதிமுதல் மானியத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மானியம் பெற சென்ற ஆண்டு 81 மலேசிய இந்தியர் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்ததாக சிறிய, நடுத்த நிறுவனக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிஸால் நைனி தெரிவித்தார்.

