கோலாலம்பூர்: மலேசியாவில் அதிநவீனத் தரவு மையத்தை அமைப்பதற்காக ‘ஏர்டிரங்க்’ நிறுவனம் $2.97 பில்லியன் மதிப்புள்ள பசுமைக்கடனைப் பெற்றுள்ளது. மொத்தம் 30 இடங்களிலிருந்து கடன் பெறப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்குப் பெரிதும் கைகொடுக்கும்.
கடன் வழங்கியதற்குத் தலைமை தாங்கிய பத்து உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களில் டிபிஎஸ், எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ், சுமிட்டோமோ மிட்சுயி வங்கி, யுஓபி ஆகியவை அடங்கும்.
இதுவே ஒற்றைத் தரவு மையத்துக்காகச் செய்யப்பட்டுள்ள ஆகப் பெரிய முதலீடு.
ஜோகூரில் அமைக்கப்படவிருக்கும் இந்தத் தரவு மையம், சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மையைப் பேணும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்கென நிதி திரட்டும் பொருட்டு, வங்கி அமைப்புகளிடமிருந்து இந்த மாபெரும் பசுமைக்கடன் பெறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது வட்டார அளவில் கூகல், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவுத் தேவைகளை நிறைவுசெய்யும். மேலும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை ஈடுசெய்யவும் சுற்றுப்புறப் பாதிப்பைக் குறைக்கவும் இத்தகைய பசுமை நிதியுதவிகள் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமைத் திட்டம் வாயிலாகச் செலவுகள் குறையும் என்றும் அதன் காரணமாகச் சேமிப்பு அதிகரிக்கும் என்றும் ஏர்டிரங்க் கூறியது. இந்தச் சேமிப்பு மலேசியாவில் தனது சமுதாயத் தாக்கத் திட்டத்துக்கு பயனளிக்கும் என்று அது தெரிவித்தது.

