தரையிறங்க 10 நிமிடம் தாமதமானதால் விமானம் ஒன்று புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. நேரம் தவறாமையை கண்டிப்புடன் கடைப்பிடிக்கும் ஜப்பானில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஜப்பான் ஏர்லைன்சின் ஜேஎல் 331 விமானம் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு தோக்கியோவின் ஹனடா விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகுவோகா விமான நிலையத்துக்குப் புறப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்குத் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த அந்த விமானம், சில பிரச்சினைகள் காரணமாக இரவு 8.18 மணிக்குதான் புறப்பட்டதாக flightradar24 இணையத்தள தகவல் கூறுகிறது.
90 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டதாக சில ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, 355 பயணிகளுடன் பறந்த அந்த விமானம் இரவு 10.10 மணிக்கு புகுவோகா விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
ஆனால், புகுவோகா விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், 10 நிமிடம் தாமதமாக வந்த அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.
அருகில் உள்ள வேறு விமான நிலையங்களில் தரையிறங்க முடியாததால், அதிகாலை 2.50 மணியளவில் மீண்டும் ஹனடா விமான நிலையத்திலேயே அந்த விமானம் தரையிறங்கியது.
அங்கு பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை விமானச் சேவை நிறுவனம் செய்திருந்தது. பின்னர் காலை 10.20 மணிக்கு அந்த விமானம் மீண்டும் புகுவோகா விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
விமான விபத்தாக இல்லாமல்போனது நிம்மதி அளிப்பதாக அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
புகுவோகா விமான நிலையம் அருகே மக்கள் குடியிருப்பதன் காரணமாக இரவு 10 மணிக்குப் பிறகு அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று விமான நிலையப் பகுதியில் ஒலி மாசு கட்டுப்பாடு நடப்பில் உள்ளது. எனவே, அங்கு இரவு 10 மணிக்குப் பிறகு விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், வானிலை பிரச்சினை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


