தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பின்லாந்து பேருந்து விபத்தில் இருவர் மரணம்; சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் காயம்

1 mins read
e5444036-91c4-4e23-ba2c-e7bc3f361435
விபத்தில் சிற்றுந்து ஓட்டுநரும் பயணி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

பின்லாந்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் இருந்த பேருந்து ஒன்று, வியாழக்கிழமை (டிசம்பர் 19) சிற்றுந்து ஒன்றுடன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், பலர் லேசாகக் காயமுற்றனர்.

அந்தப் பேருந்தில் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த 29 பயணிகள், ‘சான் பிரதர்ஸ்’ பயண முகவையுடன் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக சீன நாளிதழ் சாவ்பாவ் தெரிவித்தது. Rovaniemi எனும் பிரபல சுற்றுலாத் தலத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணி) அந்த விபத்து நிகழ்ந்தது.

சிற்றுந்து ஓட்டுநரும் பயணி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் 37 பேரில் 31 பேர், பேருந்தில் பயணம் செய்தவர்கள். அந்த 37 பேரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரையும் சீனாவையும் சேர்ந்தவர்கள் என பின்லாந்து காவல்துறை தெரிவித்தது.

டிசம்பர் 11ஆம் தேதி சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள், அந்த விபத்தில் லேசாகக் காயமுற்றனர். மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட அவர்கள், அங்கு அனுமதிக்கப்படவில்லை. சுற்றுப்பயணத்தின் எஞ்சிய இரு நாள்களில் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், அந்தச் சிற்றுந்து ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படுவதாக பின்லாந்து காவல்துறை கூறியது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் காவல்துறை சொன்னது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும், பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து நிலவரம் மோசமாக இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்