முன்னாள் தென்கொரிய அதிபருக்கும் மனைவிக்கும் சிறையில் $2 மி. நன்கொடை

முன்னாள் தென்கொரிய அதிபருக்கும் மனைவிக்கும் சிறையில் $2 மி. நன்கொடை

படம்: இபிஏ

11 Oct 2026 - 4:32 pm

2 mins read

சோல்: முன்னாள் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலும் அவரது மனைவி கிம் கியோன் கீயும் சிறைத் தண்டனையில் முதல் ஆண்டை நிறைவேற்றிய நிலையில் அவர்களது வங்கிக் கணக்கில் $2 மில்லியனுக்கும் மேல் (தென்கொரிய நாணயம் 2.19 பில்லியன் வான்) தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நீதித்துறை அமைச்சின் பிரதிநிதியும் தென்கொரிய ஜனநாயகக் கட்சி உறுப்பினருமாகிய லீ சுங் யூன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்ட தரவுகளில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

முன்னாள் அதிபர் யூனுக்கு மட்டும் $1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி, 45,770 நன்கொடையாளர்களிடம் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி வரையில் பெறப்பட்டுள்ளது.

அவரது மனைவி கிம், $228,000 தொகையை 10,415 நன்கொடையாளர்களிடமிருந்து 2025 ஆகஸ்ட் 12 முதல் அதே செப்டம்பர் 8ஆம் தேதி வரை பெற்றுள்ளார்.

இருவரும் மொத்தமாகப் பெற்றுள்ள தொகையின் மதிப்பு, தென்கொரிய அதிபரின் ஆண்டு வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருக்கும் சிறையில் உள்ள வேறு எந்தக் கைதிக்கும் கிடைக்காத அளவு நன்கொடையை அவர்கள் பெற்றுள்ளனர்.

தென்கொரியச் சட்டப்படி, சிறைவாசிகள் அன்றாட தேவைகளுக்கான பொருள்களை வாங்கிக்கொள்ள வெளியில் இருந்து நன்கொடைகள் பெறலாம். அதிகபட்சமாக அவர்கள் $3,800 வரை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட நன்கொடைகள் இருப்பில் வைக்கப்படும் அல்லது அவர்கள் விடுதலையானதும் சொந்த வங்கிக் கணக்குகளில் மாற்றப்படும்.

சிறை அதிகாரிகளின் உதவியுடன் முன்னாள் அதிபரின் சிறைக் கணக்கில் இருந்து பணம் அவரது சொந்த வங்கிக் கணக்குக்கு அடிக்கடி மாற்றப்பட்டது. அதனால் அவரது சிறைக்கணக்கு விடுவிக்கப்பட்டு வெளியில் இருந்து நன்கொடைகள் அதிக அளவில் பெறப்பட்டன என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்