2 மில்லியன் ‘ஸ்னுகா’ தொட்டில்களை மீட்டுக்கொள்ள முடிவு

2 மில்லியன் ‘ஸ்னுகா’ தொட்டில்களை மீட்டுக்கொள்ள முடிவு

1 mins read
ஐந்து சிசுக்கள் மாண்டதை அடுத்து ஃபிஷர்-பிரைஸ் நிறுவனம் நடவடிக்கை
355f6348-e06b-4af4-b198-c289f5f69500
மீட்டுக்கொள்ளப்படும் தொட்டில்களுக்காக ஃபிஷர் - பிரைஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு $25 தர முன்வந்துள்ளது. அந்தத் தொட்டில்கள் $160க்கு விற்கப்பட்டன. - படம்: அமெரிக்கப் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு ஆணையம்/ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஃபிஷர்-பிரைஸ் நிறுவனத்தின் ‘ஸ்னுகா’ தொட்டில்களில் (Snuga swings) உறங்கிய ஐந்து சிசுக்கள் மாண்டதை அடுத்து அவை மீட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிசுக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயமுள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து, 2 மில்லியன் தொட்டில்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்கப் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு ஆணையமும் ஃபிஷர் - பிரைஸ் நிறுவனமும் மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை குறித்து அக்டோபர் 10ஆம் தேதி அறிவித்தன.

‘ஸ்னுகா’ தொட்டிலில் தூங்கியபோது மாண்ட சிசுக்களின் வயது ஒரு மாதத்திற்கும் மூன்று மாதத்திற்கும் இடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2012க்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையே அக்குழந்தைகள் உயிரிழந்தன.

அத்தொட்டில்களை ஒருபோதும் குழந்தைகளை உறங்கவைக்கப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டது.

தலையணை, சிசுவின் உடலை அணைத்தவாறு இருக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் பகுதி ஆகியவற்றை உடனடியாக அகற்றிய பிறகே குழந்தைகள் விழித்திருக்கும் வேளையில் ‘ஸ்னுகா’ தொட்டிலைப் பயன்படுத்தலாம் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெற்றோர்க்கான இத்தகைய எச்சரிக்கை, ஆலோசனை மட்டும் போதாது என்று கூறும் ஆணையம், உடனடியாக வீடுகளிலிருந்தும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களிலிருந்தும் ‘ஸ்னுகா’ தொட்டில்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

2010ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 2.1 மில்லியனுக்கு மேற்பட்ட இத்தொட்டில்கள் விற்பனையாகியுள்ளன. கனடாவில் ஏறக்குறைய 99,000 தொட்டில்களும் மெக்சிகோவில் 500 தொட்டில்களும் விற்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்