துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து இரண்டு மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கம் ஐந்து நாள்களுக்கு முன்னர் துருக்கியையும் சிரியாவையும் உலுக்கியது. 28,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
சேதத்திற்கும் சோகத்திற்கும் இடையே, மக்கள் உயிருடன் மீட்கப்படும் சம்பவங்கள் நம்பிக்கை அளித்துவருகின்றன.
துருக்கியின் அங்காட்யா எனும் நகரில் நிலநடுக்கம் உலுக்கிய 128 மணிநேரத்திற்கு பின்னர், இரண்டு மாதக் குழந்தை மீட்கப்பட்டது. இரண்டு வயது பெண், ஆறு மாதக் கர்ப்பிணி, நான்கு வயது பெண்ணும், அவளுடைய தந்தை ஆகியோரும் ஐந்து நாள்களுக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 870,000 பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் 5.3 மில்லியன் பேர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மொத்தம் 2.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ $42.8 மில்லியன் நன்கொடை திரட்ட உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.
மாண்டோர் எண்ணிக்கை துருக்கியில் 22,327 பேர் என்றும், சிரியாவில் 3,574 பேர் என்றும் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

