தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் விபத்தில் சிங்கப்பூரர் இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு

1 mins read
d3f549f3-1130-489c-82c5-b679a1cdea5f
நொறுங்கிப்போன காரிலிருந்து உடல்களை மீட்க முயலும் தீயணைப்பாளர்கள். - படம்: ஜோகூர் தீயணைப்பு, மீட்புப் படை

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூரில் திங்கட்கிழமை பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூர்ப் பெண்கள் இருவரும் நிரந்தரவாசி ஒருவரும் மாண்டுபோனதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 56-61 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் மேலும் 59 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார் என்றும் கோத்தா திங்கி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஹுசைன் ஸமோரா தெரிவித்தார்.

அவர்கள் சிங்கப்பூர்ப் பதிவெண் கொண்ட ‘ஹோண்டா ஃபிரீட்’ காரில், குளுவானிலிருந்து பண்டார் தெங்காராவிற்குச் சென்றுகொண்டிருந்ததாகத் திரு ஹுசைன் கூறினார்.

அவர்களின் கார் முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த லாரியுடன் அது மோதியதாகக் கூறப்பட்டது.

இதில், சிங்கப்பூர்ப் பெண்கள் இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிபெற்ற மலேசியப் பெண் ஒருவரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோயினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்தின் பேச்சாளர் சொன்னதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஊடகம் தெரிவித்தது.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களின் குடும்பத்தினர்க்கு ஜோகூர் பாரு துணைத் தூதரகம் மூலமாகத் தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்